search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதன் பகவான் பரிகாரம்"

    நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.
    புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.

    தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.

    ஜாதகத்தில் புதன் தரும் பலன்

    * புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

    * புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

    * புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.

    * புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

    * புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.

    * புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.

    * புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.

    -ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    ×